Total Pageviews

Wednesday, June 8, 2016

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4






இந்த பிளேயரிலும் கேட்கலாம்

https://ia601503.us.archive.org/33/items/KandakottamDeivamanimaalaiPartIV/Kandakottam%20Deivamanimaalai%20Part%20IV.ogg

வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் தூண்ஒரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லைஅதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
தற்பமும்வி கற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

சைவமரபில் சிவனை வழிபடுவது போல சிவனடியாரைப்பேனுவதும் வழிபாடு என்பதாக நடைமுறை உண்டு .

குருவின் மேன்மை நம் இருளை அகற்றி நம்மை இறைவனை நோக்கி உயர்த்திவிடும் என்ற கருத்தை சடங்காச்சாரமாக சிவனடியார் வழிபாடு என்பதாக மாற்றிவிட்டார்கள்

இந்த கருத்தை வலியுறுத்தி நாயன்மார்கள் கதையையும் கூறினார்கள் . நாயன்மார்கள் என்ற  தரத்தை அடையாதவர்களும் அதுபோல நடித்து பல பிழைப்புவாதிகள் ஆன்மீகத்தில் புகுந்து சீரழிவுகளையும் செய்தார்கள்


நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே. - திருவாசகம் பாடல் எண் : 11


நான் என்ற சுயம் அகம்பாவமே வீடு பேறு அடைவதற்கான முயற்சியில் தடைக்கல்லாக வந்துவிடுகிறது ; ஆனால் யார் உண்மையான அன்பை இறைவன் மீதும் அவரது அதிதேவர்கள் மீதும் கொண்டவர்களோ ; பக்தியோகம் கைகூடியவர்களோ அவர்கள் ஒருபோதும் தன்னை துருத்திக்கொள்ளவே மாட்டார்கள் ; எப்போதும் கடவுளையே மேன்மைப்படுத்துவார்கள்

வள்ளல்பெருமானும் உன் மீது அன்புடைய நின் அடியார்களை குருவாக கொண்டு பக்தியோகம் விளைவிப்பவர்களுக்கு எந்த கெடுதலும் நேராது என்கிறார்

அவலமுறுமோ காமம் வெகுளிஉறுமோ மனத்
தற்பமும் விகற்பம் நேறுமோ இல்லை என்கிறார்



காணலிடை நீரும்ஒரு கோட்டையில் கள்வனும்
காண்உறு கயிற்றில் அறவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்தபித் தளையின்இடையும்
மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
மாயையில் கண்டுவிணே
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாழ்வென்றும் மானம்என்றும்
ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
உள்என்றும் வெளிஎன்றும்வான்
உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
உண்மைஅறி வித்தகுருவே
தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

கானல்நீர் போல அளவற்ற மாயைகள் நம்மை பிடித்து ஆட்டுவித்துக்கொண்டுள்ளன .ஒரே ஒரு சின்ன விசயத்தை விட்டு வெளியே வர  ஒரு பிறவி ஆகிவிடுகிறது . ஆனால் சற்குருநாதர் அறிவித்தால் எல்லா மாயைகளையும் கடந்து விட முடியும்

உண்மை ஒருபோதும் நாம் கண்டு பிடிப்பதல்ல ; சற்குருவால் உணர்த்துவிக்கப்படுவது  


கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
கன்மவுட லில்பருவம்நேர்
கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
கடல்நீர்கொலோ கபடமோ
உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
ஒருவிலோ நீர்க்குமிழியோ
உலைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துருத்தியோ
ஒன்றும்அறி யேன் இதனைநான்
பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டுழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
பற்றணுவும் உற்றறிகிலேன்
சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


பெருங்கன்மம் நிறைந்த இந்த உடலில் நீர்க்குமிழி போல வரும் இளமை நிலையில்லாதது . ஆனால் அதை என்னமோ பெரிய ஆயுதம் போல நினைத்து வனிதையர்களை கண்ணால் கண்டு மதிகெட்டு பாவமே பயில்கின்றேன் . நின் திருவடியில் சிறு அனுவைக்கூட என்னால் பற்ற முடியவில்லையே . தன்உணர்வித்தல் வகையில் பாடப்பட்டவை இவை


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி