Total Pageviews

Wednesday, June 8, 2016

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4






இந்த பிளேயரிலும் கேட்கலாம்

https://ia601503.us.archive.org/33/items/KandakottamDeivamanimaalaiPartIV/Kandakottam%20Deivamanimaalai%20Part%20IV.ogg

வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் தூண்ஒரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லைஅதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
தற்பமும்வி கற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

சைவமரபில் சிவனை வழிபடுவது போல சிவனடியாரைப்பேனுவதும் வழிபாடு என்பதாக நடைமுறை உண்டு .

குருவின் மேன்மை நம் இருளை அகற்றி நம்மை இறைவனை நோக்கி உயர்த்திவிடும் என்ற கருத்தை சடங்காச்சாரமாக சிவனடியார் வழிபாடு என்பதாக மாற்றிவிட்டார்கள்

இந்த கருத்தை வலியுறுத்தி நாயன்மார்கள் கதையையும் கூறினார்கள் . நாயன்மார்கள் என்ற  தரத்தை அடையாதவர்களும் அதுபோல நடித்து பல பிழைப்புவாதிகள் ஆன்மீகத்தில் புகுந்து சீரழிவுகளையும் செய்தார்கள்


நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே. - திருவாசகம் பாடல் எண் : 11


நான் என்ற சுயம் அகம்பாவமே வீடு பேறு அடைவதற்கான முயற்சியில் தடைக்கல்லாக வந்துவிடுகிறது ; ஆனால் யார் உண்மையான அன்பை இறைவன் மீதும் அவரது அதிதேவர்கள் மீதும் கொண்டவர்களோ ; பக்தியோகம் கைகூடியவர்களோ அவர்கள் ஒருபோதும் தன்னை துருத்திக்கொள்ளவே மாட்டார்கள் ; எப்போதும் கடவுளையே மேன்மைப்படுத்துவார்கள்

வள்ளல்பெருமானும் உன் மீது அன்புடைய நின் அடியார்களை குருவாக கொண்டு பக்தியோகம் விளைவிப்பவர்களுக்கு எந்த கெடுதலும் நேராது என்கிறார்

அவலமுறுமோ காமம் வெகுளிஉறுமோ மனத்
தற்பமும் விகற்பம் நேறுமோ இல்லை என்கிறார்



காணலிடை நீரும்ஒரு கோட்டையில் கள்வனும்
காண்உறு கயிற்றில் அறவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்தபித் தளையின்இடையும்
மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
மாயையில் கண்டுவிணே
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாழ்வென்றும் மானம்என்றும்
ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
உள்என்றும் வெளிஎன்றும்வான்
உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
உண்மைஅறி வித்தகுருவே
தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

கானல்நீர் போல அளவற்ற மாயைகள் நம்மை பிடித்து ஆட்டுவித்துக்கொண்டுள்ளன .ஒரே ஒரு சின்ன விசயத்தை விட்டு வெளியே வர  ஒரு பிறவி ஆகிவிடுகிறது . ஆனால் சற்குருநாதர் அறிவித்தால் எல்லா மாயைகளையும் கடந்து விட முடியும்

உண்மை ஒருபோதும் நாம் கண்டு பிடிப்பதல்ல ; சற்குருவால் உணர்த்துவிக்கப்படுவது  


கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
கன்மவுட லில்பருவம்நேர்
கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
கடல்நீர்கொலோ கபடமோ
உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
ஒருவிலோ நீர்க்குமிழியோ
உலைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துருத்தியோ
ஒன்றும்அறி யேன் இதனைநான்
பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டுழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
பற்றணுவும் உற்றறிகிலேன்
சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


பெருங்கன்மம் நிறைந்த இந்த உடலில் நீர்க்குமிழி போல வரும் இளமை நிலையில்லாதது . ஆனால் அதை என்னமோ பெரிய ஆயுதம் போல நினைத்து வனிதையர்களை கண்ணால் கண்டு மதிகெட்டு பாவமே பயில்கின்றேன் . நின் திருவடியில் சிறு அனுவைக்கூட என்னால் பற்ற முடியவில்லையே . தன்உணர்வித்தல் வகையில் பாடப்பட்டவை இவை


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி








Sunday, June 5, 2016

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 3




இந்தப்பிளேயரிலும் கேட்கலாம்

https://ia601505.us.archive.org/1/items/KandakottamDeivamanimaalaiPartIII/Kandakottam%20Deivamanimaalai%20Part%20III.ogg


ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திறம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


தேவைகள் உலக வாழ்வுக்கான தேவைகள் மிக குறைந்த பட்ச தேவைகள் நிறைவேறப்படாமல் இப்பூமியில் வாழமுடியாது

உணவு உடை இருப்பிடம் இம்மூன்றாவது பூர்த்தியானால் மட்டுமே மனிதன் ஆன்ம வாழ்வில் பயணித்து சாதனைகள் செய்யமுடியும்

வள்ளலாரை படிப்பித்து ஆளாக்கும்படியாக அவரது பெற்றோர்கள் அண்ணன் சபாபதியிடம் சென்னைக்கு அனுப்ப அவரை ப்ராட்வேயில் வாழ்ந்த பச்சையப்ப முதலியாரிடம் தமிழ் இலக்கணம் கற்கச் சேர்க்கப் பட்டார்.அப்போது அவருக்கு ஒன்பது வயது. இடைவெளியில் அடிக்கடி அவர் காணாமல் போவிடுவார்.நண்பர்கள் அவரைத் தேடிக் கொணர்வது வழக்கம். இந்தச் செயல்பற்றி அவரது அண்ணன் சபாபதிக்குச் செய்தி சொல்லப்பட்டது. ஒரு நாள் அண்ணன் மறைவில் இருந்து தம்பியைக் கண்காணித்தார்.

இடைவெளியில் இராமலிங்கம் விடுவிடு என பூங்கா பகுதியில் உள்ள கந்தர் கோட்டத்துக்குள் செல்கிறார். முன்னூறு வருடங்கள் பழமைமிக்க முருகன் ஸ்தலம் கந்தர் கோட்டம்! கோயிலுக்குள் சென்று நேரே முருகன் முன் தூண் ஓரம் நிற்பதும், வாயால் ஏதோ முனுமுனுப்பதுமாக இருக்கிறார், பின் வந்து விடுகிறார்.அன்று மாலை இராமலிங்கத்துக்கு அடியோ அடி!

மறுநாளும் இதே போல் கந்தர்கோட்டம் போய் விட்டார், இப்போது பச்சையப்ப முதலியாரே அவர் பின் சென்று கவனிக்க, யாரோ அபிஷேகக் கட்டளைக்கு தந்திருக்கும் வேளையில், அர்ச்சகர் ”யாராவது பாடுங்களேன்” என்று மூலஸ்தானத்தில் இருந்து ஒரல் எழுப்ப, ஒன்பது வயது இராமலிங்கம் அப்போது ஆசுகவியாய் தமிழ்த்தெய்வத்தின் கருணையால் வாய்மலர்ந்தது தான் கந்தர்கோட்ட தெய்வமணி மாலையின் முதல் மணி . திருவோங்கு எனத்தொடங்கும் பாடல் .

ஆசுகவி என்பது மிக சிக்கலான இலக்கண அமைப்பு கொண்டது . கற்றறிந்த பண்டிதர்களுக்கே உரிய நேர்த்தியோடு அக்கவி வெளிப்படவும் பச்சையப்ப முதலியார் கற்பிப்பதற்கு அப்பாற்பட்ட தெய்வப்பேறு உள்ள குழந்தை இது என்பதை புரிந்துகொண்டார் . சபாபதியிடம் இதை புரியவைக்க முயற்சித்தார் . இந்த குழந்தைக்கு கல்வி கற்பிக்கும் தகுதி தனக்கில்லை என கூறிவிட்டார்

இதன் தாத்பர்யம் என்னவென்று புரியாமல் தன் கை மீறிய தம்பியை பற்றி கவலைப்படுவதால் பலனில்லை என்பதாக ஒரு முடிவெடுத்து எக்கேடும் கேட்டுப்போ என்கிற அளவில் வள்ளலாரை கண்டு கொள்ளாமல் இருக்கத்தொடங்கி விட்டார்

பள்ளியும் போகாமல் காலையில் வெளியே போவதும் இரவு வந்து தூங்க வருவதுமான வள்ளலார் எப்போது வருவார் என தெரியாமல் அவரை உண்பிப்பதுபற்றியும் கடந்த நிலை உருவாகிவிட்டது

மின்ட் என சொல்லப்படும் தங்கசாலை பகுதியில் வள்ளலார் அண்ணன் வாழ்ந்த ஒதுக்குப்புறமான அந்த வீட்டுக்கு சென்றிருக்கிறேன்

நல்லவேளையாக அவ்வீடு நான்கு பேர் கைமாறி இப்போது ஆன்மீக உணர்வுள்ள ஒருவரின் கைக்கு வந்ததால் அந்த மாடி போர்ஷனை அப்படியே ஒரு கோவில் போல மாற்றி வைத்திருக்கிறார்கள்

தூத்துக்குடி மாவட்ட சன்மார்க்க அன்பரும் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலை ஊழியருமான பாலகிருஷ்ணன் அவர்கள் அவரை அண்டியோர் பல ஊர்க்கார்களையும் வெளிநாட்டினரையும் அங்கு அழைத்து சென்று காட்டும் தொண்டு செய்து அந்த இல்லம் போஷிக்க காரணமாக உள்ளார்

அந்த இல்லம் ஒரு திண்ணைக்கு அடுத்து வாசலும் அதனுள் இரண்டு மூன்று ஒட்டு குடித்தனமும் உள் படியில் ஏறிப்போனால் மாடியில் சிறு வீடும் உள்ளது

இரவு நேரமானதும் வாசலை மூடி படுத்து விடுவார்கள் . பிந்திய இரவு வரும் வள்ளலார் திண்ணையில் படுத்து விடுவார் .

சாப்பாடு வேண்டும் என்று யாரிடம் கேட்க முடியும் பசி தர்ம சங்கடமான நிலைமை வள்ளலார் அனுபவித்ததுதான்

இதற்கு முன்பே நிலைக்கண்ணாடியில் தலை வார போனால் தனக்கு பதிலாக முருகனின் அருட்காட்சி காண ஆரம்பித்து அந்த சற்குருவே அவரை ரகசியமாக நடத்திக்கொண்டிருந்தார் என்பது யாரும் அறியாதது

உலகறிய வள்ளலார் பாடிய முதல் பாடல் திருவோங்கு என்ற தெய்வமணிமாலை பாடல் என்றால் வள்ளலார் முதல்முதல் பாடியது திருத்தணி முருகனைக்கண்டு பாடியது என அவரே பின்னாளில் தெரிவித்துள்ளார் . அப்படியானால் அந்த சிறுவனை யார் திருத்தணி அழைத்து சென்றது என்றால் சாட்சாத சற்குரு முருகனே அவரை அழைத்து சென்று கொண்டிருந்தார்

அவர் வீட்டுக்கு நள்ளிரவு வந்தாலும் வாயில் கதவை திறந்து அண்ணியின் ரூபத்தில் ஒற்றியூர் வடிவாம்பிகையே வந்து உணவளிப்பார் 




சற்குருநாதர்கள் நால்வரில் ஒருவர் தரிசனம் கிடைத்துவிட்டால்போதும் மற்றவர்களும் அழைக்காமலேயே உதவிக்கு வருவார்கள் அவர்களுக்குள் எந்த பிரிவினையும் உயர்வு தாழ்வும் கிடையாது

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள்
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும் தந்து

அதிதேவர் யாராவது ஒருவரின் தரிசனம் கிடைக்கப்பெற்றால் மட்டுமே ஈ என்று இறக்காத நிலைமை உண்டாகும்

ஆனால் ஈ ஈ என்று கோவில் குளம் என்று எங்கும் ஏங்கி அலையும் சாதாரண மனிதர்களை காணும் போது வள்ளலாரின் மனம் பதைக்கிறது அவர்களுக்கு இல்லை என சொல்லாமல் ஈயும் திறம் வேண்டும் என ஏங்குகிறார்

அந்த ஏக்கம் உறு பசி தீர்த்தால் அந்த மனிதனை இறைவனை நோக்கி திறுப்பமுடியுமே என்ற ஏக்கமே அவரால் அணையாத அடுப்பு ஒன்றை வடலூரில் ஏற்ற முடிந்தது

அடுத்து மிகமிக முக்கியமான உபதேசம் எதற்காகவும் யாரையும் குறை சொல்லாதே திட்டாதே வெறுக்காதே என்ற அஹிம்சை கொள்கை . ஒரு தவறுக்கு மனிதன் மட்டும் பொறுப்பே இல்லை ; பின்னணியில் அசுர ஆவிகள் மனிதனின் சிந்தனையை கெடுக்கின்றன என்பதால் அவனை சகித்து அவன் திருந்தும்படியாக பிரார்த்தனை செய்து அவனை திருத்தவேண்டும் , கோபம் கொள்ளலாகாது

சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திறம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்

ஆம் இறைவனும் அவரது அடுத்த வெளிப்பாடுகளான நான்கு அதிதேவர்களுமே அவர்களது திருவடிக்கு நம்மை ஆளாக்கி திறமும் வாய்மையும் தூய்மையும் தரமுடியும் 



கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
கதறுவார் கள்ளுண்டதீக்
கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
கடும்பொய்இரு காதம்நாற
வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
வழக்குநல் வழக்கெனினும்நான்
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
ரோடுறவு பெறஅருளுவாய்
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
உவப்புறு குணக்குன்றமே
தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


காக்கைகள் அந்தி அடங்குகிற நேரம் ஒரு பெரிய மரத்தில் கூடி பழமை பேசும் .கரைந்துகொண்டே இருக்கும் . ஒரு காக்கை கரைவதற்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு கூட்டமாக கரைந்துகொண்டே இருக்கும் அதில் ஒரு உப்பும் சப்பும் இல்லை என்பதை வள்ளல்பெருமான் அறிந்திருக்கிறார் . உப்பும் சப்புமில்லாமல் ஓயாமல் வெட்டி பெருமை புராணம் பாடுவது மனிதர்களின் இயல்புமாகும்

இப்படி வெட்டியாக பேசுவது சாதாரண மனிதர்களை விட கள்ளுண்டவர்களுக்கு மிக மிக அதிகம் , சாராயத்தை குடித்து விட்டு கங்குகணக்கில்லாமல் உளறுவதும் ஊத்தை காதம் நாறுவதும் வாய்வலிக்கும் வரை தர்க்கம் செய்வதும் செய்வார்கள் ; சிவனைப்பற்றி தேவர்களைப்பற்றி இறைவனைப்பற்றி பேசினால் வாயை மூடு தொனதொனதென்னாதே என்பார்களாம் ; ஆனாலும் இப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் உனது புகழ் நான் பேசுவதை காதுகொடுத்து கேட்டு உன்னையும் துதிக்கும் மனது சிலருக்கு இருக்குமே அப்படிப்பட்டவர்களின் உறவு எனக்கு அமையட்டும்

இறை அடியவர்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்தவர்களை ஒதுக்கவே மாட்டார்கள் ; ஏனென்றால் சற்குருநாதன் முருகன் எப்படிப்பட்டவன் என்பது அவர்களுக்கு முன் உதாரணம் . உயர்ந்த பண்புள்ள தெய்வானையோடு மட்டுமல்ல மிக தாழ்ந்த மடக்குறத்தி வள்ளியொடும் உள்ளார்ந்து இசைவாக சந்தோசமாக வாழும் குணக்குன்று அவனல்லவா ?


நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
நன்மைதீ மைகளும் இல்லை
நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
நடுநின்ற தென்றுவீணாள்
போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
போதிப்பர் சாதிப்பர்தாம்
புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
போந்திடில் போகவிடுவார்
சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
தாம்புபாம் பெனும்அறிவுகாண்
சத்துவ அகண்டபரிபுரண காரஉப
சாந்தசிவ சிற்பிரம நீ
தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


ஞானமார்க்க யோகா வியாபாரிகளின் கல்லா களை கட்டுகிறது ; காரணம் ஒரு மனிதனை அழைத்து குண்டலினியை ஏற்றி விட்டதாக ஒன்றை சொல்லிகொடுக்கிறார்கள் ; அடுத்து நானே கடவுள் நானே கடவுள் என பத்துமுறை சொல்ல சொல்கிறார்கள்

அட நீதான் கடவுள் என்பதை இத்தனை நாள் அறியாமல் இருந்தாய் இன்னும் பல மூடர்கள் அறியாமல் வீணாக கோவில் கோவிலாக சுற்றிக்கொண்டுள்ளனர் ; இப்போதோ நீ அறிந்துவிட்டாய் .இதுதான் ஞானம் . நீ ஞானமடைந்து விட்டாய் என்று சொன்னவுடன் உச்சி குளிர்ந்து விடுகிறது நான்தான் கடவுளா என்று பெருமையாகவும் இருக்கிறது . யாருக்கும் முடிந்தளவு கெடுதலில்லாம் நமக்கும் வருமானம் தொழில் குடும்ப நிர்வாகம் சிறப்பாக இருக்க கொஞ்சம் மன பயிற்சி அறிவு நுட்பம் பகுத்தறிவு திறனை கொஞ்சம் சீவி விட்டவுடன் வாழ்வும் சமூகமும் கொஞ்சம் சிறப்பாக மாறிவிடுகிறது

அதுமட்டுமல்ல இப்பிறவிக்கு பிறகு நன்மை தீமைகள் பாவபுண்ணியங்கள் கூட வருவதில்லை ; முடிந்தளவு உத்தமனாக வாழ்ந்து குடும்பத்தை சிறப்பாக நடத்திவிட்டால் இறந்த பிறகு நீ பிரம்மத்தில் கரைந்து இல்லாமல் போய் விடுகிறாய் மறுபிறப்பு இல்லை என்று பிரமையாகவே போதித்து சாதித்து வீணாக நாட்களை கடத்துகிறார்களாம் மெய்ஞானம் அவர்களை அடைவதில்லை . அப்படியே மெதுவாக சுயமகிமைக்காக ஆன்மீகம் பேசுகிறவர்களாக மாறிவிடுவார்கள் . இன்னும் கொஞ்சம் தைரியமடைந்து ரகசியமாக இச்சைகளை களியாட்டுகளை  ஞான  விளக்கமும் கொடுப்பார்களாம் . என்ன விளக்கினாலும் தங்கள் தவறான நெறியை கைவிட மாட்டார்களாம்

சாகும் பிரமமாக இருக்கும் மனிதர்கள் நானே பிரமம் கடவுள் என்று சொல்வது பாம்பா கயிறா என கண்டுபிடிக்க முடியாமல் குளம்பும் அறிவால் உண்டாவது

தன்னுடை வினை ஒன்று கடுமையாக வந்து சாடினால் செத்தா பரவாயில்லை என உயிரை விட்டுவிடுவார்களாம் .மனிதர்கள் மீதுள்ள பாவங்களை மெதுவாக இறைவன் விசாரிக்காமல் கடுமையாக நடந்தால் ஒருவரும் உயிர் வாழ ஆசைப்படமாட்டார்கள்

இப்படிப்பட்ட நபர்கள் பிரமையாகவே போதித்து பிரமையாகவே நானே கடவுள் என சாதித்து வீணாக நாட்களை கழிக்கிறார்களாம்


பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
பார்முகம் பார்த்திரங்கும்
பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
பதியும்நல் நிதியும்உணர்வும்
சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
தீமைஒரு சற்றும்அணுகாத்
திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
செப்புகின் றோர்அடைவர்காண்
கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
கோழியங் கொடியும்விண்ணோர்
கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
கொண்டநின் கோலமறவேன்
தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
 


பூமியில் நாம் ஆங்காங்கு செல்லும்போது வன்பசி தீராமல் நம்மை பார்த்து பிச்சை கேட்பவர்களுக்கு இரக்கம் நம் மனதில் ஊறவேண்டும் காசு நம்மால் போட முடியாவிட்டாலும் இரக்கம் கொண்டு இறைவனிடமாவது அவர்களுக்கு நற்பேரளிக்கும்படியாக வேண்டவேண்டும்

சங்கீதம் 41

1. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

2. கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.

3. படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.


வள்ளலாரும் கூட இரக்கப்படுகிற பண்பை கொடு என்றுதான் வேண்டுகிறார் எல்லா நற்குணங்களையும் சற்குருவானவரின் வழிநடக்கும் சீடர்கள் அடைவார்கள் . ஏற்ற சமயத்தில் ஏற்ற உபதேசத்தால் அவர்கள் படிப்படியாக வளர்க்கப்படுவார்கள் . ஒரு நாளும் வீழ்ந்து போவதில்லை


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி