Total Pageviews

Saturday, August 15, 2015

திருப்பாவை 6



தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படவேண்டிய விசயங்கள் பல இருந்தாலும் அவைகளில் மிகவும் முக்கியமான ஒன்று கோதை அக்காவை தமிழச்சியாக பெற்றதுமாகும்

அருள்நிலையில் ஆழ்ந்த சொற்சுவையும் நயமும் பொங்கி வழிவதை எத்தனைமுறையும் ரசிக்கலாம்

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு இயல்புள்ளோர்களை எழுப்புவதாக திருப்பாவை உள்ளது . அந்த நபர்களுக்கு எந்த விசயங்கள் ஆர்வத்தை கொடுக்குமோ அத்தகைய விசயங்களையாக சொல்லி மிக எளிதாக உயர்ந்த ரகசியத்தையும் சொல்லி அவர்கள் உய்வடையும் வழியையும் காட்டியிருப்பார்கள்

இந்தபாடல் பிஞ்சு மனம் கொண்ட பிள்ளைகளுக்கானது .



குழந்தைகளுக்கு கால் கொலுசை மாட்டிவிட்டு அது அங்கும் இங்கும் ஓடும்போது ஜல் ஜல் என எழும்பும் ஒலியை பெரியவர்கள் கேட்டு ரசிப்பார்கள் ; அத்தோடு குழந்தை ஓரிடத்தில் இருக்காது . துங்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தால் அது எப்போது எழும்பும் எதைப்போய் உருட்டும் என எதிர்பார்க்கவே முடியாது . அக்குழந்தை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதையும் வேலை செய்துகொண்டே தாயானவள் கண்கானித்துக்கொள்ளவும் முடியும்

கொலுசின் இசையில் அக்குழந்தையும் இயைந்து மேலும் மேலும் ஆர்வமாக ஓடி ஆடி நடக்க கற்றுக்கொள்ளும் .கொலுசின் இசை பிள்ளைகளுக்கு பிரியமான ஒன்று . அக்காவும் பொங்கி பொங்கி வழிந்து அவ்விடத்தை நிரப்பும் ஒலியை உடைய சிலம்பை அணிந்துள்ள பிள்ளையே என்கிறாள் . புள்ளும் சிலம்பு – புள்ளுதல் என்ற வார்த்தைக்கு எவ்வளவு அர்த்தம் கொள்வது . அது உற்பவித்து நிரப்புதல் மகிழ்ச்சியை வாரி வாரி வழங்குதல் என்பது வரை செல்கிறது . புள்ளும் சிலம்பினகால் புள்ளரையன் கோவில் என்று கோவிலை சுட்டுகிறார் .

தன் உந்திக்கமலத்தில் மகாலக்ஷிமியை உடையவராக வற்றாத செல்வத்தையும் அமரிக்கையான மகிழ்ச்சியையும் கொடுப்பவரான புள்ளரையன் கோவிலைபார் ; அந்தக்கோவிலில் வெள்ளைவிழி யைப்போன்ற சங்கை நீ பார்த்திருப்பாயே . குழந்தைகளுக்கு தன் அன்புக்குறியோரின் கண்கள் மிகவும் பரிச்சியமானவையாக இருக்கும் . அதைப்போன்ற சங்கும் அதிலிருந்து எழும்பும் பேரரவமும் வாத்தியக்கருவிகளும் அங்கு பூஜை நடக்கிறது என்பதை உனக்கு உணர்த்தவில்லையா ?

ஈதென்ன இப்படி உறங்குகிறாய் ? பேய் முலை பாலை குடித்தவனின் கதையை சொல்லவா ?

அவன் குழந்தையாக இருக்கும்போது அவனை கொல்ல அரக்கி ஒருவளை ஏவினான் கம்சன் . அவள் அன்பே வடிவான தாயைப்போல வேடமிட்டு அந்தக்குழந்தையை அணுகி அதைக்கொஞ்சினால் ; பராமரித்தால் . குழந்தைக்கு சந்தர்ப்பம் பார்த்து தன் நஞ்சாகிய பாலை ஊட்டினாள் ; குழந்தையும் குடித்தது ; வல்லபம் செய்யும் அக்குழந்தை சாகவில்லை ; ஆனால் அரக்கி செத்து விழுந்தாள் . அப்படியா ? அப்புறம் ... அப்புறம்

அப்புறம் ஒரு அரக்கனை அனுப்பினான் கம்சன் . அவன் பிள்ளைகள் ஏறி விளையாடும் சகடமாக – வண்டியாக உரு மாறி குழந்தைக்கு முன்பு வந்து வந்து நிற்கிறது . அதில் அந்தக்குழந்தை ஏறினால் வானத்தில் உயரப்பறந்து அங்கிருந்து வண்டியை கவிழ்த்து குழந்தையை கொன்று விடலாமல்லவா ?


அந்தக்குழந்தையும் அதில் ஏறியது . வண்டியும் வானத்தில் உயர பறந்தது . குழந்தையும் கைதட்டி ரசித்தது . வண்டியை குடை சாய்க்கலாம் என இப்படி புரட்டினால் அந்தக்குழந்தை காலால் எதிர்பக்கமாக மிதித்து சாய விடாமல் தடுக்கிறது . சரி அந்தப்புரம் சாய்த்தால் இந்தப்புரம் மிதித்து சமப்படுத்துகிறது . ஒரு மாபெரும் அரக்கன் ஒரு குழந்தையின் காலுக்கு எதிராக சக்தியை பிரயோகித்து பலமிழந்து சோர்ந்துபோய் பூமியில் வந்து விழுந்து மூச்சிரைத்து செத்துப்போனான்


அரசர்கள் செங்கோலை வைத்து ஆட்சி செய்வதை கோலோச்சுதல் என்பார்கள் ; அதைப்போல காலால் அவன் கள்ளசகடத்தை கலக்கழிய காலோச்சினானாம் .


அவன் குழந்தையாக இருக்கும்போதே இவ்வளவு பராக்கிரமம் காட்டினானா ?

ஆம் . அவன் வெள்ளமாக பொங்கும் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற அதிதேவர் மீது அறிதுயில் கொள்ளும் பரமாத்மா . அவனே படைக்கப்பட்ட யாவற்றுக்கும் வித்து . வெளிப்படாத அருவமான கடவுளின் வெளிப்பட்ட யாவும் - ஜடஇயற்கையும் உயிரிணங்களும் அனைத்தும் அவனைக்கொண்டே கடவுளால் படைக்கப்பட்டது . ஆகவேதான் அவனை அறிதுயிலில் இருக்கிறவனாக - ஜடமாகவும் அதே நேரத்தில் இயங்குகிறவனாகவும் காட்ட பாற்கடலில் துயில்கிறவன் என்கிறார்கள் .

இன்றைக்கு உலகத்தால் பாராட்டப்படும் ஞானிகளும் முனிவர்களும் யோகிகளும் எதனால் இந்த உன்னதமான நிலையை அடைந்தார்கள் தெரியுமா ?

நீயும் அவர்களைப்போல பெரும் சாதனை செய்யவேண்டுமா ?

எளிதான ரகசியம் . வழி அனைத்து படைப்புகளுக்கும் வித்தான அவனை உள்ளத்தில் உள்வாங்கி இருத்திகொள்வதுதான் . அவனை மட்டும் உள்ளத்தில் குடியேற்றி விட்டால்போதுமானது ; சகலமும் கைவரப்பெறும்

அதற்கு நீ என்ன செய்யவேண்டும் . முதலாவது கேள் . யார் எது சொன்னாலும் கேட்டு பழகு . கேள்விஞானம் என்றுதான் உள்ளது , புரிந்தாலும் புரியாவிட்டாலும் கேட்கிற காது – மனநிலையை வளர்த்துக்கொள்க .

அதற்குத்தான் சத்சங்கம் கூடும் கோவிலுக்கு போகவேண்டும் . நீ என்றோ கேட்டது உனக்குள்ளாக மெல்ல வளர்ந்து சந்தர்ப்பம் சூழ்நிலை வாய்த்ததும் உனக்குள்ளாக இருந்து பிராகாசிக்கிற அறிவாக வெளிப்படும்

அதற்குத்தான் கோவிலுக்கு போகவேண்டும் . அங்கு பல பிறவிகளாக அந்தப்பரந்தாமனை உள்ளத்துக்கொண்ட ஆத்மாக்கள் பலர் வருவார்கள் . அவர்கள் அங்கு வந்து உள்ளம் குளிர ஹரி ஹரி என மெல்ல உச்சரிப்பார்கள் . அந்த ஒலி உள்ளம் புகுந்து உன் இதயத்தை நிரப்பினால் நீயும் மேன்மையடைவாய்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி