Total Pageviews

Friday, August 7, 2015

திருப்பாவை 22



இந்தப்பிளேயரிலும் கேட்கலாம்

https://ia801508.us.archive.org/28/items/22Track22_201606/22Track22%20அங்கன்மா%20ஞாலத்து.ogg





அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் - 22


தமிழச்சி கோதை அக்காவின் உள்ளத்திலிருந்து பொங்கி வந்த திருப்பாவையை கேட்டுக்கொண்டிருந்தாலே போதும் ; தமிழ் புலமை தானே வந்துவிடும்


இவ்வளவு எளிமையாக எவ்வளவு அற்புதமான கருத்துகளை அள்ளிதெளித்துள்ளார்கள் . அதனால் மெய்மறப்பதொடு சரி எழுதலாம் என்றே தோன்றுவதில்லை .


திருப்பாவை முழுதும் ஒவ்வொரு பாடலாக ஒவ்வொருவரை துயிலெழுப்பும் அக்கா ; இப்போது தனது இதயம் ஆக்கிரமித்த காதலனிடம் வந்து விட்டாள் .


எந்த அக்கறையும் இல்லாமல் அவனோ துயின்று கொண்டிருக்கிறான்


பொதுவாக நான் காதலை ஆதரிப்பதில்லை . அதில் வரும் இம்சைகள் இருக்கிறதே கொஞ்ச நஞ்சமல்ல . பல ரூபத்தில் வித விதமாக நம்மை அடித்து அலைக்களிக்கும் . இந்த இம்சைகள் ; கற்பனைகள் எல்லாமே நமக்குள்ளே இருக்கும் மாயைகளாக இருக்கும் ; அது நம் எதிராளி அப்படிப்பட்ட நபர் என்பதாக நம்மை நம்ப வைக்கும் . ஆனால் முடிவில் அது அனைத்தும் பொய் ; நாமாக கற்பனை செய்து கொண்டதில் கால் பங்கு கூட அந்த நபரிடம் தகுதியோ ; அன்போ ; அக்கறையோ இல்லை ; ஏமாந்துவிட்டோம் என்பதாகவே முடியும் . 99 % காதல்கள் ஏமாறுவதாகத்தான் இருக்கிறது

பெண்கள் அவ்வளவு ஈசியாக யாரையும் காதலிப்பதில்லை . எப்படியோ எந்தெந்த சுழ்நிலையில் விழுந்து விட்டால் ; தான் எதோ ரெம்ப திறமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து இந்த காதலில் விழுந்ததாக கொஞ்சம் ஈகொவோடு பிடிவாதம் வேறு பிடிப்பார்கள் . கொஞ்சம் ஆய்வு மனப்பான்மையோடு எதிராளியை எடை போடமாட்டார்கள் ; அதற்கு பதிலாக தனக்கு தானே எவ்வளவு அன்பு செழுத்துவார்களோ நம்பிக்கை வைப்பார்களோ அவ்வளவு நம்பிக்கை அன்பு செழுத்துவார்கள் . குருட்டு அன்பு வைத்துக்கொள்வார்கள் . எச்சரிக்கையோடு கொஞ்சம் நிதானிப்போம் யோசிப்போம் என இருக்கமாட்டார்கள் . அதனால்தான் தமிழ் ; பெண்களை பேதை என்று அழைக்கிறது . நம்பமாட்டாள் ; எப்படியோ நம்பிவிட்டால் குருட்டு நம்பிக்கையாகவே பேதையாக இருப்பாள்

அப்போது அந்த காதலன் அதை உணர்ந்துகொள்ளாமல் உதாசீனமாக இருக்கிறான் என்றால் அவர்கள் படும் அவஸ்த்தை வாயினால் விவரிக்க இயலுமா ?


தன் காதலின் மீதுள்ள அன்பினால் ; நம்பிக்கையால் நீ எந்திரி நீ எந்திரி என ஒவ்வொருவாராக ரவுசு செய்து எழுப்பிக்கொண்டு அழைத்துக்கொண்டு காதலனிடம் அக்கா வந்து விட்டாள் . அவன் இப்படிப்பட்டவன் அப்படிப்பட்டவன் என்றெல்லாம் பெருமை வேறு நிறைய சொல்லிவிட்டாள் ; இவ்வளவு அவனைப்பற்றி சொல்கிறாளே ; அவனுக்கும் இவளுக்கும் ஒரு இது இல்லாமல் இப்படி பிதற்றமாட்டாள் என்று ஊருக்கே தெரிந்திருக்கும் ; அவனிடம் சென்றவுடன் அவன் அப்படியே அந்த இதை ஊரறிய காட்டும்படி அன்பை வெளிப்படுத்துகிரானா இல்லையா பார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு அக்காவிடம் இல்லாமலா இருந்திருக்கும் .


அங்கு போனவுடன் அது புஸ்வானம் என்றாகி விட்டது . அவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை ; அலட்டலுமில்லை ; அக்கறையுமில்லை ; அவன் பாட்டுக்கு தூங்கிக்கொண்டு இருக்கிறான் .

இப்படி ஒரு நிலைமையில் மனித காதலாக இருந்தால் என்ன நடக்கும் . அப்படியே அவமானத்தில் கூனி ; இந்த ஆளையா நாம் காதலித்தோம் ; ஏமாந்தது போதுமடா சாமி ; தூக்கிஎறிந்து விட்டு நிம்மதியாக இருப்பதுமேல் என்றாகி விடும் .

ஆனால் அக்கா என்ன செய்கிறார்கள் . இவன் மனிதனல்லவே ; பரமாத்மா ; நாராயணன் ; கடவுளின் சகல வெளிப்பாடுகளையும் தன்னுளே அடக்கியவன் . மொத்த குத்தகைதாரன் . இவனை விட்டால் கடவுளிடம் செல்லமுடியாது .


இவன் மரணமில்லாதவன் . ஒளி சரீரம் உள்ளவன் . தேவைப்பட்டால் பூமிக்கு அவதாரமாக வருவான் . அல்லது வராமல் நித்தியஜீவனோடு பரலோகத்தில் இருந்து கொள்வான் .


ஆனால் பிறப்பெடுத்த நான் இவனின் மூலமாக அல்லாது ஒளிசரீரமோ ; மரணமில்லா பெருவாழ்வோ பெற முடியாது .


அவன் அக்கறை இல்லாமல் இருந்தாலும் இவனை இளக்கியே நான் பரலோகம் போகமுடியும் .


அக்கறையிலாமல் இல்லாமல் இருப்பது இன்று நேற்றா ?


ராமாவதராத்திலும் சீதையாக கொஞ்ச நஞ்ச அவஸ்த்தையா ?


வருவான் வருவான் என காத்துக்கிடந்தேன் . வந்த உடன் அக்கினி பிரவேசம் செய்யசொன்னான் .


அப்புறம் கொஞ்ச நாள்தான் நிம்மதியாக வாழ்ந்தது . உண்மை என்பது என்னவாக இருந்தாலும் ராஜநீதி என்பது வேறு . அவன் பொதுமக்களுக்காக சந்தேகம் இல்லாத வெளிப்படையான வாழ்வு வாழவேண்டும் என்று என்னை காட்டில் விட்டு விட்டு பிரிந்தேதானே வாழ்ந்தான் .


ஆனாலும் பரந்தாமன் . மனித பிறவியால் வந்த பாவங்கள் ; சாபங்கள் தீராமல் பரலோகம் போகமுடியாது . அதற்கு இவன் கருணை வைத்து பார்த்தால் அன்றி வேறு வழி கிடையாது


ஆகவே அக்கா எந்த மான அவமானமும் அடையாமல் ; சரணாகதி ஒன்றையே ஆபரணமாக கொண்டு எப்படி வேண்டுகிறாள் பாருங்கள் .


பிரபஞ்சத்தின் அருள்மையமான அரங்கத்தின் அரசனே .


நீ தூங்குகிற கட்டிலின் கீழே உன் அருளை வேண்டி ; சத்சங்கம் கூடி எங்கள் தலையை சாய்த்து கிடக்கிறோம் .


கிங்கிணி வாயழகா . நீ பேச மாட்டாய் ; ஆனால் பேசினாலோ ஞானமும் தத்துவமும் கலகலவென உதிரத்தொடங்கி விடும் .


நீ பேசவே வேண்டியதில்லை . தாமரை மொட்டு போல மூடிகிடக்கிற அந்த ரெண்டு கண்ணையும் திறந்து எங்களைப்பார்த்தாலே போதுமே


சூரியனும் சந்திரனும் உலகத்தின் மீது உதித்தவுடன் இருள் அகன்று விடுகிறதல்லவா ?


அப்படி அந்த இரண்டு கண்களும் எங்களைபார்த்தாலே போதும் எங்களின் பிறவி நீளுவதற்கான சாபம் அழிந்து விடுமல்லவா ?


அக்கா உண்மையில் நிலைமையை திறமையாக சமாளிக்கிறாளோ இல்லை . சரணாகதி தத்துவத்தின் உச்சத்திலே நின்றுதான் இப்படி பாடமுடியும்










நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்


ஓம் நமோ நாராயணனாய






சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்


ஓம் நமோ சிவாய






சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்


ஓம் நமோ சேஷாய






நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்


ஓம் நமோ நாராயணியாய






அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி




தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி