Total Pageviews

Sunday, March 30, 2014

ஜீவ சமாதிகளை வள்ளலார் ஆதரித்தாரா ?



மரணமில்லா பெருவாழ்வு பெறுவதெ பிறவிப்பெருங்கடலை கடக்கும் வாழ்வின் லட்சியம் !

மரணமில்லா பெருவாழ்வு என்றவுடன் அதை ஜீவ சமாதி என்பதாக மேலோட்டமாக எடுத்துக்கொள்ளுகிறோம் ! ஜீவன் என்ற வார்த்தையை கண்டு ஏமாந்து விடுகிறோம் ! சமாதி என்ற வார்த்தையை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம் ! சமாதி என்றால் முடிந்து விட்டது அடங்கி விட்டார் அதாவது ஆயுள் முடிந்து விட்டது ! ஜீவனோடு இருப்பதாக சொல்லப்படுவதற்கு ஆதாரம் ஏதேனும் உண்டா ? அவர் வந்தார் அதை செய்தார் இதை செய்தார் என்று சில சாட்சிகள் நடக்கலாம் ! ஆனால் வந்தது அவர்தானா ? அவர் பெயரை சொல்லிகொண்டு அசுர ஆவிகளாலும் வர முடியும் !

ஏனென்றால் எது சரியான நித்திய ஜீவனோ அதை மறைத்து பொய்யின் பக்கமாக ; சாதகர்களை திருப்பி விட பிரயத்தனம் அசுர ஆவிகளால் செய்யப்படுகின்றன !

மாறுபாடாக நித்திய ஜீவன் என்பது சமாதியடைவதல்ல ஸ்தூல உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவது என்பதை விளக்கிகாட்டியவர் வள்ளலார் !

தமிழக சித்தர்கள் ; ஞானிகளில் வள்ளலார்  ; அகத்தியர் ; பதஞ்சலி ; போகர் போன்ற சிலர்  மட்டுமே ஒளியுடம்பு பெற்று விண்ணகம் சென்றவர்கள்  ! கலியுக முடிவில் ஆண்டவர் ஒருவர் வரும்போது தாங்களும் வந்து உலகை ஆழுவோம் என்று குறிப்பிட்டுள்ளனர் - இவர்கள் அனைவரும் யோகத்துடன் பக்தியை இனைத்து - அதாவது பக்தி யோகத்தை கடை பிடித்தவர்கள் ஆனால் பக்தி அற்ற யோகத்தை மட்டும் கடைபிடித்த சித்தர்கள் ஜீவ சமாதியை பிரபல படுத்தினர்  !

கலியுக முடிவில் கல்கியாக தானே வரப்போவதாக ராமரும் , கிருஷ்ணரும் , இயேசுவும் சொல்லிவிட்டு விண்ணகம் சென்றனர் ! அம்மூவரும் ஒருவரே வரப்போகிற கல்கியும் அவரே என்பது மெய்ஞானம் !

யார் வரப்போவது என்பது பற்றி தர்க்கம் செய்து காலம் போக்காமல் கல்கி ஒருவர் விண்ணகத்திலிருந்து யுக முடிவில் வர உள்ளார் என்கிற உண்மை ஒன்றை ஏற்றுக்கொண்டால் கூட போதுமானது !

வள்ளலார் தானே ஆண்டவராக வரப்போவதாக சொல்லவில்லை ! ஆனால் ஆண்டவர் வரும்போது மட்டுமே தானும் உடன் வரப்போவதாக சொன்னார் 1 வள்ளலாரின் பேருபதேசத்தை ஆராய்ந்தீர்களானால் இந்த வெளிப்பாட்டை அறியலாம் !

இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள்
அவ்வாறு வந்து உலகில் தானும் கல்கியின் சத்திய ஆட்சியில் உலகை ஆட்சி செய்பவருள் ஒருவனாக இருப்பேன் ! அப்போது அதர்மம் முற்றிலுமாக அழிக்கப்படும் என்பது வள்ளலாரின் கூற்று !!

நித்திய ஜீவனை அடைந்த வள்ளலார் உயிர் பிரியாமல் தனது சரீரத்தை ஒளியுடம்பாக மாற்றம் அடைந்து அதனால் சரீரத்துடனும் ஆத்துமாவுடனும் உயிருடனும் உள்ளார் அது சாகாக்கல்வி ! அத்தகையவர்கள் தற்போது பூமியில் இல்லை அவர்கள் விண்ணகம் சென்று விட்டனர்

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது

`` ஏறாத நிலை மேல் என்னை ஏற்றிவிட்டார் `` என வள்ளலார் குறிப்பிடும் இடம் அது ! அந்த இடத்தை அடைய முடியாதவர்கள் - ஞானத்தில் முழுமையடையாதவர்கள் ; யோகத்தில் முழுமையடையாதவர்கள் இந்த பூமியை கடந்து செல்ல பக்குவம் பெற முடியாதலால் ஜீவ சமாதியடைந்து விட்டதாக ஒரு போலி தோற்றத்தை - மாய்மாலத்தை உண்டாக்கி தாங்களும் நித்திய ஜீவனை அடைந்து விட்டது போல ஏமாற்றிகொண்டுள்ளனர் !

நித்திய ஜீவன் என்பது உடல் அழியாமல் காத்துக்கொள்ளுவது அல்ல ! எகிப்திய ராஜாக்கள் தங்களின் செல்வத்தை பயன்படுத்தி உடலை அழுகவிடாமால் மம்மி ஆக்கி அதை பிரமீடுகள் அமைத்து பல நூறு ஆண்டுகள் பாதுகாத்து வைத்தார்கள் ! லெனின் உடலை பாடம் செய்து இது நாள் வரை வைத்திருந்தார்கள் ! பிறகு அதை எடுத்து இப்போது அடக்கம் செய்து விட்டார்கள் ! உடலை அழுகாமல் காத்துக்கொள்ளும் யோக கலை ஜீவ சமாதியால் ஒன்றும் பிரயோஜனமில்லை !

எகிப்திய மம்மிகளால் அந்த ஆத்துமாக்களுக்கு - ராஜாக்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் உள்ளதா ? - இல்லை ! அதுபோல ஜீவசமாதியில் உள்ள ஆத்துமாக்களுக்கும் அந்த ஜீவ சமாதியால் ஒரு பிரயோஜனமும் இல்லை !

நித்திய ஜீவன் என்பது :

1)உடல் அழுகாமல் பார்த்துக்கொள்ளுவது அல்ல உடலை ஒளிதேகமாக மாற்றுவது ! அது ரூபமல்ல அரூபமானது ! அந்தக கண்ணால் காணமுடியாதது ; தேவைப்பட்டால் காட்டிக்கொள்ளவும் கூடியது !

2) உயிரை விடுவதல்ல ; உயிர் பிரியாமல் இருப்பது அதன் பிறகு அவர்கள் இந்த பூமியில் இருக்கமாட்டார்கள் ! ஏனென்றால் சாவுக்கேதுவானவர்கள் இருக்கும் இந்த பூமி அவர்களுக்கு உரிய இடமல்ல !

கீதை 8:15 பக்தியில் யோகம் விளைந்த மகத்துவமான ஆத்துமாக்கள் யுகபுருஷனின் வாசஸ்தலத்தை அடைந்தபிறகு துயறங்கள் நிறைந்த தற்காலிகமான இப்பூவுலகுக்கு எப்போதும் திரும்ப வரவே மாட்டார்கள் ; ஏனென்றால் அதிஉண்ணத வெளிச்சத்தை அவர்கள் அடைந்து கொண்டார்கள் !

கீதை 8:16 பிறப்பும் இறப்பும் திரும்பதிரும்ப சம்பவிக்கும் இப்பூவுலகில் வளமிக்க இடங்கள் முதல் வளம்குறைந்த இடங்கள் வரை எங்கும் துயறங்களே நிறைந்துள்ளன ; ஆனால் யுகபுருஷனாகிய எனது வாசஸ்தலத்தை வந்தடைந்தவனோ மரணமில்லாபெருவாழ்வு அடைகிறான் !

கீதை 8:20 பிறப்பு இறப்பை கடந்த நித்தியஜீவன் அருளப்பெற்ற ஆத்துமாக்கள் 
மரணமில்லாபெருவாழ்வு என்றொரு உண்ணதமான நிலையை அடைகின்றன ! அவைகள் ஒருபோதும் மரிப்பதில்லை ! இவ்வுலகம் முழுமையும் அழிவுக்குள்ளான பிறகும் அவைகள் மாத்திரம் மரணமில்லா பெருவாழ்வில் நிலைக்கின்றன !

கீதை 8:21 மரணமில்லாபெருவாழ்வு என்று தத்துவஞானிகளால் வர்ணிக்கப்படும் அந்த உண்ணத இலக்கை அடைந்த பிறகு ஒருவன் ஒருபோதும் திரும்ப பூமிக்கு வருவதில்லை ! அந்த இடமே எனது பரலோக வாசஸ்தலமாகும் - யுகபுருஷனின் இருப்பிடமாகும் !

இந்த பூமி மற்றும் அனைத்து அசையும் அசையா பொருட்களும் கடவுளால் யார் மூலமாக உருவாக்கபட்டு யாருக்குள் தங்கியும் இருந்தும் அழிந்தும் வருகிறதோ அந்த யுக புருஷனின் உண்ணதமான பரலோக வாசஸ்தலம் ஒன்று உண்டு ! ஒளிதேகம் பெற்றவர்களே அங்கு செல்லமுடியும் ! அங்கு சென்றவர்கள் திரும்ப பூமிக்கு வரமாட்டார்கள் ! பூமியில் வந்து பல சித்துக்கள் விளையாட்டுகள் செய்ததாக அவர்களைப்பற்றி ஒன்றும் செய்தி வராது !

வள்ளலார் சித்தியடைந்த பிறகு அங்கு தோன்றினார் ; இங்கு தோன்றினார் இதை செய்தார் அதை செய்தார் என்று ஏதேனும் செய்தி இது நாள் வரை வந்துள்ளதா ? அவரின் நெறியில் வளர்வோருக்கு அவரது ஞான அனுக்ரகம் உண்டே தவிற மதமாக சடங்காக சம்பிரதாயமாக அது வளரவில்லை ! ஏனென்றால் பூமியில் அவர் வந்து செயல்படுவதில்லை ! இதுவே அவர் பிறவாப்பெரு நிலை என்ற நித்தியஜீவனை பெற்றதன் அடையாளம் !

அரூபமான அருட்பெரும் ஜோதியாகிய கடவுளை அடைவதற்கான மார்க்கத்தை அருளி சீடர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் குரு என்ற நிலையில் அருளுகிறாரே தவிற தன்னை ஆண்டவர் என்று கூட அவர் பட்டம் அளித்துக்கொள்ளவில்லை !

தானும் கடவுளைப்போல ஆகி விட்டதாக தன்னை நாடி வருவோருக்கு லவ்கீக சம்பத்துகளை அருளுவதாக காட்டிகொள்ளுவதில்லை !

ஆனால் இவைகளுக்கு நேருக்கு மாறானவை ஜீவ சமாதிகள் ! இந்த ஜீவ சமாதிகள் என்பது தனது மூதாதையர்கள் கடவுளாகி விட்டதாக குல தெய்வமாகி வழிபடும் மனித சம்பிரதாயத்தின் வளர்ச்சி !

மனித பந்தபாசத்தால் தங்கள் முன்னோர்களை வழிபடும் பழக்கம் உலகளவில் வளர்ந்த ஒன்று ! அப்படி வழிபடும்போது சில நண்மைகளும் கேட்டதும் நடக்கும் ! ஆனால் அது உலக வாழ்வுக்கு பயன்படுமே தவிற பிறவாப்பெரு நிலைக்கு ஞானவளர்ச்சிக்கு அது பயன்படவே பயன்படாது !

இந்த குலதெய்வ வழிபாடு பழக்கத்தின் அடிப்படையே அவரும் கடவுள் போல ஆகிவிட்டார் என்பதுவே அல்லது இறந்த மனிதனை கடவுளுக்கு இனை வைப்பதுவே ஆகும் ! அதை ராமர் கிருஷ்னர் வந்தபோது ஒழித்தனர் ! கடவுளை அவதாரங்கள்
ஞானிகள் மகான்கள் மூலமாக வழிபடலாமே தவிற ஞானிகள் மகான்களை  வழிபடக்கூடாது ! அதனால் தான் வைணவத்தில் ராம நாமம் ; கிருஷ்ண நாமம் என்றார்கள் !

அப்படியில்லாமல் தானும் கடவுளாகி விட்டேன் என்ற போக்கு மனிதனுக்கு வருவது `` இரணியன் வாதம் என்பது `` !! இந்த இரணியன் வாதம் என்பது பல ரூபத்தில் பூமியில் தலைகாட்டிகொண்டே இருக்கும் !
இன்னார் ஜீவ சமாதியாகி விட்டார் அவர் இங்கிருந்து அருள் பாலிக்கிறார் என்பதன் உட்பொருள் அதுவே ! தமிழகத்திலுள்ள பல ஆலயங்களில் ஒரு நபர் அடங்கியதாக இருக்கும் ! அந்த சமாதியின் மீது ஒரு லிங்கத்தை வைத்து அவர் பெயரால் ஸ்வரம் என்று பெயர் வைத்துவிடுவார்கள் ! சிவன் கோவில்களெல்லாம் இப்படி மனிதனின் சமாதியின் மீது லிங்கம் வைத்து அவரின் பெயரையும் இனைத்து ஈஸ்வரன் என்று வைத்தவையே ! மனிதர்கள் எந்திரம் எழுதி வைத்து உருவாக்கிய கோவில்களை விட இந்த ஜீவசாமாதி கோவில்களே பிரபலமடையும் ! ஆனால் அவைகளின் அடிப்படை இவரும் கடவுளாகி விட்டார் ; இவரை வழிபட்டு உலகாயாதம் அடைந்து கொள்ளலாம் என்பதுவே 1 ஆனால் அது ஆத்துமா உய்வடைய பிறவாப்பெரு நிலை பெற உதவவே உதவாது !

வள்ளலாரின் பேருபதேசத்திலிருந்து :

அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.

உடலை அழியாமல் காப்பது என்ற நோக்கமே தவறானது ! உண்மையை நோக்கி முன்னேறவிடாமல் - பிறவாபெரு நிலை பெறுவதற்கு முயற்சிக்காமல் திசைதிருப்புவது ! இவரும் கடவுளாகி விட்டார் என ஜீவ சமாதியடைய வைத்து அவரிடம் அற்ப பிரயோஜனங்களை பெற வழிபட மக்களை தூண்டுவது !

வள்ளலாரின் மன வருத்தத்தை பாருங்கள் :

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.

சித்தர்களை அவர் அசுத்த மாயாகாரிகள் ; உண்மையை மறைத்தவர்கள் என்றுதான் சொல்லியுள்ளார் !

இவாறிருக்க வள்ளலார் நெறியில் இருப்போரும் உண்மையை உணராது மீண்டும் ஜீவசமாதிகளை போய் பார்க்கும்படி ஊக்குவிப்பது அஞ்ஞானமே ஆகும் ! உண்மை எது என அறியாததாலும் தங்களுக்கும் இதுபோல நாளை பேர் வரவேண்டும் என ஆசையாலும் இத்தகைய தவறுகளுக்கு துனை போகிறார்கள் !

வள்ளலாரின் குருவருளால் ஏக இறைவன் நமது மனக்கண்ணை திறந்தருளூவாராக !!




நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி