Total Pageviews

Thursday, February 20, 2014

சிதம்பர ரகசியம் !!

(இங்கு க்ளிக் செய்து இசையை கேட்டுக்கொண்டு வாசிக்கவும்)

அல்லது  இந்த  பிளேயரிலும் கேட்கலாம்
https://ia800501.us.archive.org/26/items/OMNamhShivayaByKrishnaDas/OM%20Namh%20Shivaya%20by%20Krishna%20Das.ogg


சிதம்பர ரகசியம் என்பது நடராஜர் சன்னதிக்கு மேற்கே ஒரு அறை இருக்கும் . அதைப்பார்ப்பதற்கு நுழைவுச்சீட்டு பெற்றுக்கொண்டு செல்லவேண்டும் . அங்குபோனால் ஒரு அறையை காட்டுவார்கள் ; அது இருட்டாக இருக்கும் அதில் சிவனுக்கு அடையாளமாக ஒரு வில்வம் வைத்திருப்பார்கள் !

இந்த ரகசியத்தின் அர்த்தத்தை பலரும் விளக்கமளித்தாயிற்று !
அது இறை நிலை என்பது வெட்டவெளி ! சகல அண்டங்களையும் (சூரிய குடும்பங்கள் ) உள்ளடக்கிய பேரண்டம் அல்லது பிரபஞ்சம் இருள் மயமான வெட்ட வெளிக்குள் இருக்கிறது !
பிரபஞ்சம் நாளும் வளர்ந்து கொண்டே – விரிவடைந்து கொண்டே இருக்கிறது . அது எவ்வளவு வளர்ந்தாலும் அது எதில் வளருகிறதோ அல்லது எது எல்லாவற்றையும் ஊடுருவியும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டும் உள்ளதோ அந்த வெட்டவெளி – அரூபம்  இன்னும் அதை விட பெரியதாக இருந்து கொண்டேதான் இருக்கிறது ! அதன் நீளஅகலத்தை யாரும் அறியார் !

இந்த அறைக்கு நுழைவு சீட்டு இருப்பதால் அந்த அறையை மட்டுமே ரகசியம் அது என்ன என்பதான கேள்வியோடு மனிதர்களின் மனம் ;அறிவு ; ஞானம் தேக்கமடைந்து அதற்கு அப்பால் அக்கோவிலில் உள்ள எளிதான ; ஆழமான ; நுட்பமான ; அவசியுமுமான ரகசியம் கண்டுகொள்ளாமலே விடப்பட்டுள்ளது

மகாகுரு வள்ளலார் அவர்களின் ஆசியும் அருட்பொழிவும் வேண்டி தைப்பூசம் 2014 ற்கு வடலூர் நீரோடையில் தாய் வீட்டில் எனது நண்பர்கள் குழாம் தங்கி சித்தி வளாகத்தில் தியானம் செய்து வந்தோம்

இப்பயணம் எனக்கு இரண்டாம் பயணம் ! முதல் முறையும் கூட்டம் கருதி ஞானசபை செல்லவில்லை ! ஆனால் இம்முறை 18 ம் தேதி ஞானசபை சென்றபோது அதை மகாகுரு வள்ளலார் `உத்தர ஞான சிதம்பரம்``` `` என குறித்திருப்பதும் அதில் சிற்சபை ; பொற்சபை ; ஞானசபை அமைத்து ஞானசபையில் ஏழு மாயத்திரைகளை அகற்றினால் மட்டுமே அருட்பெரும்ஜோதியாகிய ஏக அரூப இறைவனை தரிசிக்க முடியும் என உணர்த்தியிருப்பதையும் அறிந்தேன்

அப்படியானால் சிதம்பரத்திலும் இது தொடர்பான ரகசியம் இருக்கவேண்டும் என்ற உணர்வு எழுந்ததால் சிதம்பரம் செல்ல முடிவெடுத்தேன் 

 ஏனெனில் மகாகுரு வள்ளலார் சிதம்பரத்தில் சில நாட்கள் தரித்திருந்தே வடலூர் வந்து சேர்ந்தார் ! அதோடு தருமசாலை ; ஜீவகாருண்யம் ; தயவு ஆகியவற்றை முன்னேடுத்துக்கொண்டிருந்த வள்ளலாரை ஆதித்தகப்பன் சற்குரு சிவன் – சிவனடியாராக வந்து திருவடி தீட்சை அளித்தபிறகே சைவ சமய வழிபாட்டு நெறியிலிருந்து அருட்பெரும்ஜோதி – ஏக இறை வழிபாட்டுக்கு மாறிக்கொண்டார் !

குருவின் மூலமாக கடவுளை வழிபடுவது என்ற ஆதி வழிபாட்டு இந்து தர்ம நெறியை காலப்போக்கில் குருவையே கடவுளாக்கி வழிபடுவதாக நெறிபிறழ்ந்த நிலையில் வள்ளலார் யாரை வழிபட்டுக்கொண்டிருந்தாரோ அந்த சிவனே நேரடியாக வந்து தீட்சை அளித்தபிறகுதான் அவரால் வழிகாட்டப்பட்டே அருட்பெரும்ஜோதி வழிபாட்டுக்கு வள்ளலார் மாறினார் – இந்த உத்தர ஞான சிதம்பரத்தை அமைத்தார் என்பதில் உணர்வுள்ளோருக்கு மெய்ஞானம் உள்ளது !

உத்தரம் என்பது வடக்கு திசை மற்றும் உச்சி – உன்னதத்தை குறிப்பது ! உன்னதத்திலிருந்து வரும் ஞானம் நம்மை அம்பரத்திற்கு உயர்த்தும் என்பதே இதன் அறிவுரை !


சிதம்பரத்திற்கும் இதற்கு முன்பு நான் சென்றதில்லை ! சீர்காழி நண்பர் குமரேசன் அவர்களிடத்தும் எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் அவரை சிதம்பரம் அழைத்துவிட்டு அவர் வரும்வரை சிதம்பரம் கோவிலை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தேன் !

இங்கு நடராஜர் பொன்னம்பலத்தில் நடனமாடுகிறார் என்பதையும் ஒரு ரகசிய அறை ஒன்றும் இருக்கிறது என கேள்விப்பட்டிருந்தேனே தவிர அங்கு உள்ளேயே பெருமாளுக்கும் கோவில் இருப்பதை அறியவில்லை !

பெருமாள் கோவில் மேற்கிருந்து கிழக்கு நோக்கி கொடிமரத்துடனும் ; நடராஜர் வடக்கிருந்து தெற்கு நோக்கி கொடிமரத்துடனும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன ! இவ்விரண்டு + அடையாளம் போல ஒன்றை ஒன்று வெட்டிக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளன .இவ்விரண்டு கோவில்களும் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும் இடத்தில் ஒருவர் நின்றால் ஒரே நேரத்தில் இரண்டு சன்னதிகளிலும் நடக்கும் பூஜையை தரிசிக்க முடியும் !

இக்கோவிலில் சைவ மற்றும் வைணவ மார்க்கங்களின் சமரசம் ; அல்லது ஒரு சாதகனுக்கு சரீரம் மற்றும் ஆத்மாவுக்கான சற்குருக்கள் சிவன் மற்றும் விஷ்ணுவின் அருளில்லாமல் ஆத்மசாதனையில் முன்னேறி இறைவனை அறியும் மேன்மையை அடைய முடியாது . இருவரின் அருளும் கலந்தால் மட்டுமே ரகசியத்தை அறியும் திறவுகோல் கிடைக்கும் ! – இது அடிப்படையான - மிக முக்கியமான சிதம்பர ரகசியம் !


இன்னும் ஆழமாக செல்லும்போது நடராஜர் சன்னதியின் கொடிமரத்தை அடுத்து சிவன் காளியோடு ஊர்த்தவ தாண்டம் ஆடும் சன்னதி உள்ளது !

நான் குறிப்பிடும் இடத்தில் ஒருவர் நின்று பெருமாளை நோக்குவாரானால் அவரின் இடப்புறத்தில் சிவன் காளியோடு ஊர்த்தவமும் ; வலப்புறத்தில் சிவகாமியோடு ஆனந்த தாண்டவமும் ஆடிக்கொண்டிருப்பார்கள் ! சிவனின் இரண்டு தாண்டவங்களும் இருக்கும் ஒரு நேர்கோட்டை பெருமாள் செங்குத்தாக வந்து கலப்பார் !!


மனித சரீரம் இல்லாமல் ; பிறவி எடுக்காமல் ஒருவர் ஆத்மா ஞானத்தில் முழுமையடைய முடியாது ! ஆத்மா துய்மையடைந்து ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு அல்லது தேவனாக மாறுவதற்கு சரீரம் அவசியம் !

சரீரத்தின் அதிபதியான சிவன் அந்த சரீரத்தின் இச்சைகளோடு கலந்து நடனமாடிக்கொண்டிருப்பது சாதாரண மனித நிலை ! (காளி – ரஜோ குணத்தின் – உலகியல் வாழ்வின் ஆசா பாஷைகளுக்கு அடையாளம் )


உலக ஆசைகள் இச்சைகளின் வழி ஊர்த்தவம் ஆடி ஆத்மாக்கள் பாவங்களுக்குள்ளாக விழுகின்றன ! ஆனால் அதற்கு பதில் விளைவுகளாக துன்பங்கள் மேலிருந்து – பரத்திலிருந்து வந்து கலக்கும்போது ; அந்த ஆத்மா நிதானப்படுவதும் ; இறைவனைத்தேடுவதும் – ஏதாவது பக்தி நெறிக்குள்ளாகி தனது இச்சைகளை தடைபோடும் போது அல்லது காளியின் ஆதிக்கத்தில் ஆட்படாமல் காளியை அடக்கும் நிலையை அது அடையும் போது அந்த சரீரம் சிற்சபையாக பரிணமிக்கிறது !

இப்படிப்பட்ட ஆத்மாக்கள் மென்மேலும் ஏதாவது ஒரு குருபராமபரியத்தில் அருளில் வளரவேண்டும் ! அந்த அருள் பரத்திலிருந்து – பெருமாளிடமிருந்து வந்து கலந்து கொண்டே இருக்கும் !

அந்த வளர்ச்சியில் அதே சரீரம் பொற்சபையாக ஆனந்த தாண்டவமாக – சிவகாமி என்பது சத் குனத்திற்கு அடையாளம் ! சத் குணமான சிவகாமியின் அன்பு அரவணைப்புடன் இவ்வுலக வாழ்விலேயே ஆனந்த மயத்திற்குள் பிரவேசிக்கிறது !

இப்பூவுலக வாழ்விலேயே தனக்கும் ஆனந்தமாக பிறருக்கும் ஆனந்தம் பயப்பதாக அவ்வாழ்வு இருக்கும் ! அப்போது சரீரத்திற்கு ஐம்புலன்களும் அடங்கி இருக்கும் ! பூதம் அடங்கி மிதிக்கப்பட்டு நமது ஆளுகையில் இருக்கும் ! கையில் ஏந்தப்பட்ட ஞானத்தீ நம்மையும் செழுமைப்படுத்தி பிறரையும் செழுமைப்படுத்தும் !

ஐம்புலன்களை ஆதிக்கப்படுத்துதல் என்பது பக்தியினால் மட்டும் விழையாது ! சரீரத்தில் மேற்கொள்ளப்படும் தியான ; யோகா சாதனைகள் அவசியம் ! யோகங்கள் மூலமாக மனதை சீர்படுத்தி இவ்வுலக வாழ்வை ஆனந்த மயமாக்கிகொள்ளும் அனேக குருமார்க்கங்கள் வந்து விட்டனர் ! ஆனால் அதுமட்டுமே முழுமையடைய போதுமானதல்ல ; இறைவனின் அருள் ; ஆத்மாவின் சற்குருவாகிய நாராயணனது கிருபை அவசியம் !

சரீரத்தில் மேற்கொள்ளப்படும் யோக சித்திகளுக்கு சற்குருவான சிவனின் தயவு எவ்வளவு அவசியமோ அதுபோல ஆத்மாவுக்கு சற்குரு – பரமாத்மா நாராயணனது கிருபையும் அவசியம் !

அத்வைதம் யோகா சாதனைகளுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு ஆத்மா சாதனைகளுக்கு துவைதம் அவசியம் ! இந்த சமரச வேதமே – மத்வ நெறியே சிதம்பர ரகசியத்தின் அடுத்த வெளிப்பாடு !

இந்த ரகசியமே உத்தரஞான சிதமபரத்திலும் மகாகுரு வள்ளலாரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது !


யோக அப்பியாசங்களின் மூலமாக நமது ஆத்மா உறையும் சரீரம் சிற்சபையாகவும் பொற்சபையாகவும் மாற்றம் அடைவதற்கான முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் ! அதற்கு பரத்திலிருந்து ஞானம் அருட்பெரும்ஜோதியாகிய ஆண்டவரிடம் நாராயணன் மூலமாக பக்தி – வேண்டுதல் செய்து பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் !

பாவங்கள் போக்கும் திரிவேணி சங்கம் என்பது இதுவே !

அலகாபாத்தில்  தூய நீர்பெருக்கு யமுனைத்துறைவன் என மாகாகுரு ஆண்டாள் பாடினாரே அந்த யமுனை நாராயணனது அடையாளமாக  வடக்கிருந்து கங்கையில் போய்  கலக்கிறது !கங்கை   சிவனுக்கு அடையாளமானது !மேற்கிருந்து கிழக்காக ஓடிக்கொண்டிருக்கிறது ! அங்கு கங்கை இரண்டு அம்சங்கலுள்ளதாக ஆகிவிடுகிறது !

அதே போலத்தான் திருஆணிக்கூடல் என அருணகிரியாரால் வர்ணிக்கப்படும் பவானியிலும் காவேரி மேற்கிலிருந்து கிழக்காக ஓடிக்கொண்டுள்ளது ! அதில் வடக்கிருந்து பவாணி – பர அருள் ஆணியாக வந்து அடித்து ஆத்மாவை மேன்மைப்படுத்துகிறது !

இந்த இடங்களில் நீராடுவது நமது பாவங்களை தீர்க்கும் என்பது அடையாளமே தவிர அதன் ஞானம் சாதகனுக்கு சற்குருக்களான சிவன்  மற்றும் நாராயணனது கிருபை அவசியம் என்பதே !

சரீரத்தில் மேற்கொள்ளப்படும் யோகசாதனைகளில் ஆத்மா விழிப்பு பெற்றபிறகு ஆத்மாவை உணர்ந்து அதன் பாவபதிவுகளை சுத்தம் செய்து ஆத்ம சொரூபியாக சரீரத்தை அடக்கி ஞானத்தீயை உடையவனாக ஒருவன் மாறவேண்டும் !

அவ்வாறு ஆத்மா சுத்தம் செய்தல் என்பதே ஏழு மாயத்திரைகள் ! இந்த மாயத்திரைகள் சுத்தம் செய்யப்பட்டால் மட்டுமே ஆத்மா ஒளிசரீரம் பெற்று அருட்பெரும்ஜோதியை தரிசிக்க இயலும் !


இதுவே சிதம்பரத்தில் திரை நீக்கம் செய்து இறைவனை வெட்டவெளியாக காட்டப்படுவது !

ஆத்மாவே நமது பல பிறவிகளில் நமது பாவப்பதிவுகளுடன் நம்மை கடவுளை உணரவிடாமல் மயங்கிய நிலையில் உள்ளது ! அந்த ஆத்மா சுத்தமடைவதும் ஒளி சரீரம் பெறுவது என்பதும் சரீரத்தை அடக்கி அதை அவசியமற்றதாக்குவதும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கான பாதை !



நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி